4 பிஸ்கட்ல 1 கிளாஸ் பால் மட்டுமா இருக்கும்?

4 பிஸ்கட்ல 1 கிளாஸ் பால் மட்டுமா இருக்கும்?

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஆயிரம் உறவில் பெருமைகளில்லை; அன்னை தந்தையே அன்பின் எல்லை.

எப்போதும் மிகவும் விரும்பி கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மாதா, பிதா, குரு, தெய்வம். இப்படி நம்ம படிச்சிருக்கோம்..அந்த உண்மையை புரிஞ்சு வாழ்ந்துட்டும் இருக்கோம்.  ஒவ்வொருத்தர் வாழ்க்கைலயும் அம்மா அப்பா பத்தி பேசணும்னா நிறைய பேசலாம். ஆயிரம் புஸ்தகம் எழுதினாலும் தீராது.

ஒரு வேளை நான் இன்னைக்கு அநேகமான மக்களுக்கு என்னுடைய பயிற்சி பட்டறையின் வழியாக நேர்மறை எண்ணங்கள் பற்றி பேசுறேன் என்றால் அதற்கு முதல் காரணம் என்னோட அம்மா தான். விளையாட்டு பருவத்துல அதெல்லாம் புரியாமலே நிறைய கேள்விகள் எல்லாம் எதிர்த்து கேட்டிருக்கேன். ஏன், எதுக்கு, எப்படி, யார் சொன்னாங்க இப்படி பல கேள்விகள். ஆனால், அவங்களோட வாழ்க்கைல இதெல்லாம் யாரவது உக்காந்து சொல்லி குடுத்திருப்பாங்களானு கேட்டா சத்தியமா எனக்கு பதில் தெரியாது.

அவங்க கிட்டருந்து எப்பவுமே வர்ற பதில், கெட்டது மற்றும் தேவை இல்லாதது பற்றி நம்ம ஏன் பேசணும்னு சொல்லுவாங்க. அவங்களோட சித்தாந்தம் அது. எங்க அம்மா எனக்கு சொன்னாங்க..நான் உனக்கு சொல்றேன் காரணம் கேக்காத எனக்கு தெரியாதுனு சொல்லிட்டு போயிருவாங்க. ஒருவேளை நான் கேட்ட பல தருணங்கள் அவங்கள காயப்படுத்திருக்கும். அது 18 வயசு வரைக்கும் புரியல.
பத்தொன்பது வயசுல வேலைக்கு வெளி உலகத்துக்கு வந்ததாலயோ என்னவோ  தெரியல, கொஞ்சம் சீக்கிரமா புரிஞ்சுக்கிட்டேன். அப்பா வேற லெவல்..என்னைக்குமே பெருசா ஏதும் திட்ட மாட்டாங்க. ஆனா வாழ்க்கைனா என்னனு ரொம்ப எளிமையா சொல்லுவாங்க. பரீட்சைல மார்க் கம்மியா இருந்தா திட்டுறத விட்டுட்டு,  நீ படிச்சா உனக்கு நல்லதுன்னு சொல்லுவாங்க. அதுக்குள்ள ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். இப்படி பல… ஒரேயொரு பையன் அப்படினு தலைல தூக்கியும் வச்சுக்க மாட்டாங்க…எங்கயும் விட்டுகொடுக்கவும் மாட்டாங்க. அதான் அவங்கள நான் வேற லெவல்னு சொன்னேன்.
ஆனா ஒண்ணு மட்டும் அப்பாக்கிட்டருந்து பார்க்க முடிஞ்சுது.. கடந்த ஒரு 5 வருஷமா என் மேல பாசம் கொஞ்சம் அதிகமாவே வெளிய தெரிய ஆரம்பிச்சுச்சு. முன்னாடியே உள்ளது தான். அப்போ உள்ள வச்சிருந்தாங்க…இப்போ நாளுக்கு நாள் அது கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது. முன்னாடியே அப்பானாலே கொஞ்சம் பயம், நிறைய மரியாதை..இதனால் எனக்கும் அப்பாவுக்கும் கொஞ்சம் பாசம் நிறைந்த டிஸ்டன்ஸ் இருந்துச்சு…அந்த தூரம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா கம்மியாக ஆரம்பிச்சிருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்குது.
அது சரி, இதெல்லாம் இங்க எதுக்கு எழுதணும்னு உங்களுக்கு தோணும். ஒரு பிஸ்கட் பாக்கெட் தான் எழுத வச்சுச்சு. அட ஆமாங்க. இப்போ லாக்டௌன்ல வீட்லயே தான உக்காந்து வேல பார்க்க வேண்டி இருக்குது. இதை எங்க அப்பா தினமும் பாப்பாங்க..தொந்தரவு ஏதும் பண்ண மாட்டாங்க. ஆனா நான் என்ன பன்றேன்னு எப்பவும் மாதிரி நல்லா கவனிப்பாங்க. இப்போ என்ன கவனிச்சாங்க னு தெரியுமா? கீழே இணைச்சிருக்குற போட்டோ பாருங்களேன். இது தான் என்னோட வர்க் ஸ்டேஷன். இப்போ எழுதிட்டிருக்கும்போது தான் போட்டோ எடுத்தேன். இந்த போட்டோவுல உங்க கண்களுக்கு என்ன தெரியுதோ எனக்கு தெரியாது. ஆனா, எங்க அப்பா கண்களுக்கு நான் இப்படி வச்சிருக்குற பிஸ்கட் தெளிவா தெரிஞ்சிருக்குது போல. வேலை செஞ்சுட்டிருக்கும்போது ஏதாவது கொறிச்சிட்டிருப்பேன்.

மறுநாள் வெளிய போன அப்பா திரும்பி வந்தபோது அவங்க கையில் ரெண்டு  பொட்டலாம் இருந்துச்சு.  ஒண்ணு என்னோட பொண்ணுக்கு ஏதோ ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்திருந்தாங்க. என்னடா இது இன்னொரு பொட்டலம்னு ஓரமா உக்காந்து பார்த்துட்டிருந்தேன். மெதுவா அதை  பிரிச்சு என்னோட மேஜை மேல 2 மில்க் பிக்கிஸ் பிஸ்கட், 2 மேரி கோல்ட்  பிஸ்கட் எடுத்து வச்சாரு பாக்கணுமே. அப்படியே மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்துச்சு. இந்த அப்பான்னு ஒரு ஜீவன் இருக்காங்களே, இவங்க எப்பவுமே இப்படி தான். மனசுக்குள்ளயே புள்ளைங்கள காதலிப்பாங்க, ரசிப்பாங்க, சத்தமே இல்லாம அவங்க வேலைய   செய்வாங்க.

4 பிஸ்கட்ல 1 கிளாஸ் பால் இருக்குதோ இல்லையோ, என்னால அப்பாவின் தாயமுதம் குடிக்க முடிஞ்சுது.
அபியும் நானும் திரைப்படத்தில் வரும் பாடலின் வரிகள்  — “தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே”
இந்த 60 வயதை கடந்த போதும் அவரிடம் என்னால் உணர முடிந்தது என்னவென்றால், அப்பாவின் மயிர் நிறைந்த மார்பை தாண்டி இதயத்தொட்டிலிலே நான் இன்னும் குழந்தையாகவே தவழ்வதை  மட்டுமே.
உங்க வாழ்க்கைலயும் இப்படி ஏதாச்சும் தருணம் இருந்திருக்குனா ஜஸ்ட் அதை நினச்சு பார்த்து  சந்தோஷப்பட்டுக்கோங்க….
தந்தையின் அன்பின் நிழலில்..ராகேஷ் எழுதுகிறார் … 

R B

Website: http://rakeshbabu.com

Psychologist | Neuro Potential Strategist | Researcher | Founder of Shreshta Minds. Passionate about helping individuals discover their innate potential through psychology, neuroscience, and holistic human development.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *